திருவாடானை, நவ.6: திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் இருந்து திருவடி மிதியூர் வழியாக தோட்டமங்கலத்திற்கு சாலை அமைக்கப்பட்டு பஸ் போக்குவரத்தும் இயக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பஸ் போக்குவரத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த சாலையை திருவடி மிதியூரிலிருந்து தோட்ட மங்கலம் வரை சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருவாடானையில் இருந்து திருவடி மிதியூர் வரை சீரமைக்கப்படாமல் பல இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து திருவடி மிதியூரை சேர்ந்த ஜோசப் சின்னப்பன் கூறுகையில், இந்த சாலை அமைக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சுமார் மூன்று கிலோ மீட்டர் ஜல்லிக்கட்டு அனைத்தும் பெயர்ந்து போய் விட்டது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகையால் இந்த சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.