திருவாடானை, ஆக. 19: திருவாடானை அருகே சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே டி.நாகனி தெற்கு குடியிருப்பு பகுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் இந்த சாலையில் தினசரி நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களை சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் பதம் பார்ப்பதால் அப்பகுதி சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் அவசரகால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் இந்த சேதமடைந்த சாலையில் தினசரி செல்லும் போது குண்டும், குழியுமாக உள்ள சாலையில் உள்ள பள்ளங்களில் தடுமாறி விழுந்து அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சுமார் 2 கிமீ தூரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படும் இந்த சாலையினை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.