திருவாடானை, ஜூலை 7: திருவாடானையில் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த ஆண்டு ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது.
திருவாடானையில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தை, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கியமான வணிக மையமாக விளங்குகிறது. மாவட்ட அளவில் அதிக ஆடுகள் விற்பனை நடைபெறும் சந்தை. மேலும் அதிகளவில் மக்கள் வரும் சந்தையாகவும் இந்த வார சந்தை திகழ்கிறது.
இந்த சந்தைக்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஏலம் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில், பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொது ஏலத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 59 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்டனர். அதே நேரத்தில், டெண்டர் பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. டெண்டர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதில் 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏற்கனவே சந்தையை நடத்தி வந்த செந்தில் என்பவருக்கே இந்த முறையும் சந்தை ஒதுக்கப்பட்டது.