திருவள்ளூர், ஆக. 15: திருவள்ளூர் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18வது விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ப.விஷ்ணுச்சரண் தலைமை தாங்கினார். முதன்மைச் செயல் அலுவலர் மோ.பரணிதரன் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா பிரகாஷ் வரவேற்றார். விழாவில் இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீரர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் வைஷ்ணவ், வருவாய் கோட்ட அலுவலர் ஏ.கற்பகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றி மாணவர்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசு புத்தகங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.
தொடக்கக்கல்வி மாணவர்களின் ட்ரில், மல்லக்கம்பம், கராத்தே, விளையாட்டு நடனம் போன்றவையும், நடுநிலைப் பள்ளி மாணவர்களின் யோகாசனம், வீரக் கலையான சிலம்பம், மல்லக்கம்பம், கராத்தே போன்றவையும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மூங்கில் நடனம், சலங்கை நடனம், பிரமீடு என பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற காவேரி குடிலுக்கு பள்ளியின் முதல் நிலை மாணவர்கள் என்ற கோப்பையினை வழங்கி கவுரவித்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.