திருவண்ணாமலை, ஆக. 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. அதில், 5,251 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும், தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக, மொத்தப் பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதி உள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, போட்டித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆன்லைனில் வெளிப்பட்டது. அதனை, சம்மந்தப்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரம், எஸ்ஆர்ஜிடிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம், கரன் கலை அறிவியல் கல்லூரியில் ஆயிரம், சிஷ்யா மெட்ரிக் பள்ளியில் 500, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆயிரம், கம்பன் மகளிர் கல்லூரியில் 901 உள்பட மொத்தம் 6,401 பேர் இப்போட்டித் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று நடந்த தேர்வில் 5,251 பேர் தேர்வு எழுதினர். 1150 பேர்தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையத்துக்கு செல்போன், கை கடிகாரம் உள்ளிட்ட எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக 615 பேர் நியமிக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்தியபிரியா, எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஐஜி சத்திய பிரியா பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான போட்டித் தேர்வு நேர்மையான முறையில் நடைபெறுகிறது. எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்றார்.