திருவண்ணாமலை, ஜூன் 24: திருவண்ணாமலை மாட வீதியில், விமான ஓடுதளம் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இப்பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருத்தலமாகும். இத்திருக்கோயிலை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எனவே, அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அண்ணாமலையார் கோயில் மாட வீதிகளான பெரிய தெரு, பேகோபுர வீதிகள் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மாட வீதியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள தேரடி வீதி மற்றும் தென்திசையில் அமைந்துள்ள திருவூடல் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1.07 கிமீ தூரம் தார் சாலையை அகற்றிவிட்டு, கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
இந்நிலையில், தேரோடும் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீண்டகால உறுதித்தன்மையுடன் நிலைக்கும் வகையில், தரமாக சாலை அமைக்க வேண்டும் என் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கான்கிரீட் சாலையின் தரத்தை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தார். கான்கிரீட் சாலையில் மழைநீர் எளிதில் வடிந்து செல்லும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். அதோடு, திருவண்ணாமலை வரும் ஆன்மிக பக்தர்கள் பயன்படுத்தும் பிரதான சாலை என்பதால், பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு ஜூலை இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், கான்கிரீட் சாலையின் மேற்பகுதி வழுவழுப்பாக இருந்தால் தேரோட்டத்துக்கு பாதிக்கும் என்பதால், புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, விமான ஓடுதளம் அமைக்க பயன்படுத்தப்படும் சிலிப்பார்ம் பேவர் மிஷின் எனப்படும் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி இந்த சாலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, டிஆர்ஓ ராம்பிரதீபன், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் சந்திரசேகர், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.