திருவண்ணாமலை, ஆக.2: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். தென்னகத்து கயிலாயமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் மலை(கிரி) வடிவில் இறைவன் எழுந்தருளி காட்சியளிக்கிறார். எனவே, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதனால், ஒவ்வொரு பவுர்ணமியும் திருவண்ணாமலையில் திருவிழா கோலமாக உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1.8 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, நேற்று பகலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது.
கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கி.மீட்டர் தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதிகாலை ெதாடங்கி இரவு 11 மணி வரை நடையடைப்பு இல்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமி நாட்களில் சிறப்பு தரிசனம், முன்னுரிமை தரிசனம், கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது தரிசனம் மட்டும் ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தரிசன வரிசையில் 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. தரிசனம் முடிந்ததும் தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 10க்கும் மேற்பட்ட பவுர்ணமி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதைெயாட்டி, திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதோடு, திருவண்ணாமலைக்கு வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தினசரி இயக்கப்படும் விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மன்னார்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. ரயிலில் நின்று பயணிக்கவும் இடமில்லாத அளவில் கூட்டம் அலைமோதியது. எனவே பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.