திருவண்ணாமலை, பிப்.27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலைார் கோயில், மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்பதால், இங்கு நடைபெறும் மகா சிவராத்திரி தனித்துவமானது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர், அதிகாலை 5 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிவரை லட்சார்ச்சனை நடைபெற்றது. துளசி, வில்வம் மற்றும் மல்லி, முல்லை, சாமந்தி உள்ளிட்ட எண்ணற்ற மலர்களை கொண்டு சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது.
அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பகல் 12.05 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இரவு முழுவதும் விடிய விடிய அண்ணாமலையார் கோயில் சிறப்பு கால பூஜைகள் நடந்தன. அதன்படி, இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இன்று அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரி தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, இரவு நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி விடிய, விடிய பக்தர்கள் விழித்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், ராஜகோபுரம் எதிரில், நேற்று காலை தொடங்கி, இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணி நேரம் 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் அண்ணாமலையார் கோயில் கலையரங்கத்தில் இரவு முழுவதும் சிறப்பு நிகழ்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாழம்பூ அணிவித்து வழிபாடு
சிவபெருமானின் அடி, முடி காணும் போட்டியில் பிரம்மனுக்கு ஆதரவாக தாழம்பூ பொய் சொன்னதால், தாழம்பூ இனி பூஜைக்கு உதவாது என சிவபெருமான் சபித்தார். இதனால் இன்றளவும் தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்துவது இல்லை. ஆனால் சிவராத்திரி அன்று நள்ளிரவில், லிங்கோத்பவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையின்போது மட்டும் தாழம்பூ பயன்படுத்தப்படும். லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாழம்பூ அணிவித்து மகா தீபாராதனை நடைபெறும். இந்த தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற லிங்கோத்பவரை வேறெந்த சன்னதியிலும் தரிசிக்க இயலாது.