Wednesday, May 31, 2023
Home » திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்

by kannappan
Published: Last Updated on

பிரம்மா யாகம் நடத்தியபோது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தைச் சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இப்பகுதி “வட்டாறு’ என அழைக்கப்பட்டது. இருநதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக் கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்’’ என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்தபோது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பரந்தாமன் இங்கே தமது பாம்புப் படுக்கையில் சயனித்தவாறு காட்சியளிக்கிறார். திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. அவரது தரிசனம் திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் மூன்று வாசல்கள் வழியாக கிடைக்கப்பெறுகிறது. ஆதிகேசவப் பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதை இங்கு காணலாம். இந்த ஊரின் நடுவில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி கேசவப் பெருமானின் திருவடிகளை வட்டமிட்டு பரளியாறு ஓடுவதால் இந்த ஊர் திருவட்டாறு எனும் பெயர் பெற்றது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழ்ந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். இது 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவதாகும். மூலவர்: ஆதிகேசவப் பெருமாள் தாயார்: மரகதவல்லி நாச்சியார்நாகர்கோவில் இடர்தீர்த்த பெருமாள்நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம் பகுதியிலுள்ளது இடர் தீர்த்த பெருமாள் கோயில். இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருட்பாலிக்கிறார்.முன்னொரு காலத்தில் தென்னகத்தை ஆண்டுவந்த குலோத்துங்க சோழ மன்னன் நாகதோஷத்தால் அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பயனளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசித்து வந்தான். அன்றிரவு அவனது கனவில் திருப்பதி தேவஸ்தானத்தில் நின்றருளும் வேங்கடவன் வந்தார். உனது இடர் தீர்ந்து போகும் இனி அச்சம் வேண்டாம் என்று கூறினார். அதன்படி அவனது இடர் தீர்ந்து போனது. தான் கனவில் கண்ட அதே ரூபத்தில் வேங்கடவனுக்கு சிலை வடிவம் கொடுத்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கோயில் எழுப்பினான். இடரை தீர்த்தவர் என்பதாலே குலோத்துங்க சோழ மன்னன், இத்தல பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் என நாமம் இட்டு வணங்கினான்.மூலவர்: இடர்தீர்த்த பெருமாள்தாயார்: ராஜராஜேஸ்வரிநெல்லை ஸ்ரீ  கரியமாணிக்கப் பெருமாள் திருநெல்வேலி நகரில் நின்ற, இருந்த, படுத்த திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சேவை சாதிக்கும் ஆலயம்தான், கரியமாணிக்கப் பெருமாள் கோயில். மகாபாரதம் அருளியவர் வியாச முனிவர். இவரது முதன்மையான சீடர் பைலர். இவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தாமிரபரணி குறுக்குத்துறையில் அமர்ந்து ஸ்ரீனிவாச பெருமாளை நினைத்து தவம் புரிந்தார். அந்த காலத்தில் இங்கு கோயில் இல்லாத காரணத்தினால், மனதிற்குள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்து வந்தார், பைலர் முனிவர். ஒரு கோடி மலரால் ஸ்ரீ னிவாசரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாகச் சேர்ந்து, மிக பிரகாசமான நீல ரத்தினமானது. அந்த நீலரத்தினத்திற்குள்ளிருந்து ஸ்ரீ னிவாசர் காட்சி கொடுத்தார். அவரை பைலர், ‘‘நீலமணிநாதர்’’ என்ற திருநாமம் சூட்டி வணங்கினார். இதனால்தான் இந்த ஷேத்திரம் ‘‘ஸ்ரீ நீல ரத்ன ஷேத்திரம்’’ ஆனது. இந்த தலம் ‘‘வேணுவனம்’’ என்றும் போற்றப்படுகிறது.“பகவானே.. உங்கள் வடிவத்தை காண நான் பேறு பெற்றுள்ளேன். வடக்கே திருப்பதியில் வேங்கட மலையில் குடிகொண்ட வேங்கடாசலபதி பெருமானே! இந்த அடியவனுக்குக் காட்சி கொடுத்தது போலவே, நீவிர் தேவர்கள் புடைசூழத் தோன்றி பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். “சனி, சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட உபாதைகளை நீக்கி, கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே” என இத்தல இறைவனைப் பற்றி நம்மாழ்வார் பாடுகிறார். இதன் மூலம் இந்த திருக்கோயிலானது, சனி மற்றும் சூரியனின் கிரக தோஷங்களைப் போக்கும் ஆலயம் என்பது உறுதியாகிறது. இத்தல மூலவர் நின்ற திருக்கோலத்தில் கரியமாணிக்கப் பெருமாளாகவும், சயனத் திருக்கோலத்தில் அனந்த பத்மநாபப் பெருமாளாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் லட்சுமி நாராயணராகவும் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இங்கு இரண்டு தாயார் சந்நதிகள் உள்ளன. சவுந்திரவல்லி மற்றும் கோதைவல்லி ஆகிய இருவரும் தனித்தனி சந்நதியில் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார்கள்.கிருஷ்ணவர்ம மகாராஜாவிற்கு, இத்தல இறைவனான கரியமாணிக்கப் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். அவரால்தான் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டதாக செவிவழிச் செய்தி ஒன்றும் சொல்லப்படுகிறது. அதுபோலவே மணப்படை வீடு ஸ்ரீவிஷ்ணுவர்த்த மகாராஜாவுக்கும், இத்தல இறைவன் அருட்பாலித்து உள்ளார். “இங்கு நீலமணிநாதர், கரியமாணிக்கம் என்ற பெயரில் கண்நோய் தீர்ப்பவராகவே உள்ளார்” என நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலமாகும். இங்குள்ள கருடனுக்கு இரண்டு சிவப்பு கண்கள் பொருந்தியிருப்பது, கண்நோய் தீர்ப்பதை உணர்த்துவதாக உள்ளது. இத்தலம் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது. திருநெல்வேலி டவுன் சந்தி விநாயகர்கோயில் பஸ் நிலையத்தில் இறங்கி, அரை கிலோமீட்டர் தூரத்தில் நடந்தால் கோயிலை அடையலாம்.தொகுப்பு: ச.சுடலைகுமார்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi