குலசேகரம், நவ.8: திருவட்டார் அருகே செவரக்கோடு கல்லிங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பேபி (60). இந்த தம்பதிக்கு அசோக்ராஜ் (27) என்ற மகன் இருந்தார். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு அவ்வப்போது கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். எனினும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்ராஜ் வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அசோக்ராஜ் சமையல் அறையில் இருந்த மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேபி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அசோக்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய வேலை கிடைக்காததால் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.