குலசேகரம், ஆக.17: திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரியார் புகழ்பாடும் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயண போஸ்டர்கள் மத்தியில் பெரியாரின் பெரிய அளவிலான படத்துடன் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் நேற்று திருவட்டார், புண்ணியத்து குளம் பகுதியில் இந்த போஸ்டர்களில் இருந்த பெரியார் படத்தை மர்ம நபர்கள் கிழித்து எறிந்துள்ளனர். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான திமுகவினர் திருவட்டாரில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த சுபிகுமார் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் வழக்கறிஞர் அணியை சேர்ந்த அஷ்வின் ஹென்றி, பிரசாத், பேரூராட்சி துணை தலைவர்கள் ஜோஸ் எட்வர்ட், தங்கவேல், மாவட்ட பிரதிநிதி பொன்ஜேம்ஸ் பொன்மனை பேரூர் செயலாளர் சேம் பெனட் சதீஷ், திமுக நிர்வாகிகள் சிவன், டாக்டர் செல்வின் ஞானபிரகாஷ், காந்தி, ஜோண்ஸ், விஷ்ணு, வினு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியார் தொழி லாளர் கழகம் போராட்டம்: பெரியார் தொழிலாளர் கழக தலைவர் நீதியரசர் கூறுகையில், தீண்டாமை என்னும் கொடுமைக்கு எதிராக போராடி சமூகநீதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார். பெரியார் தந்த சீர்திருத்தங்கள் இன்று அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடலாக உள்ளது. சமூக ஏற்ற தாழ்வுகளை களைந்து அனைவரையும் மனிதனாக மதிக்க செய்த பெரியாரின் புகழை யாரும் அழிக்க முடியாது. திருவட்டாரில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களில் பெரியார் படம் கிழிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த செயலை செய்த சமூக விரோதிகளை காவல் துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து பெரியார் தொழிலாளர் கழகம் சார்பில் 20ம் தேதி திருவட்டாரில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.