வானூர், ஜூன் 10: திருவக்கரையில் டிராக்டர் மீது மோதிய முன்விரோதத்தில் டிப்பர் லாரி டிரைவரை வெட்டி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். விக்கிரவாண்டி தாலுகா மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் திருவக்கரையில் இயங்கி வரும் கிரஷர் ஒன்றில் டிப்பர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி திருவக்கரைக்கு வீட்டில் இருந்து வேலைக்கு வந்தார். அன்றிரவு வீட்டுக்கு செல்லாமல், திருவக்கரையில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு, மீண்டும் தனது மகன் கண்ணனின் பைக்கில் கிரஷருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவர் குடியிருப்பு பகுதி அருகில் ெசன்றபோது கதிர்வேலை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றினர். அதில், கதிர்வேல் பைக்கில் செல்லும்போது, அவரை ஒரு கும்பல் பின் தொடர்ந்து சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளை வைத்து திருவக்கரை சுப்புராயன் (21), அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (20), கார்த்திகேயன், சக்திவேல் (21) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கதிர்வேலை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரும் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கதிர்வேல் ஓட்டிச்சென்ற டிப்பர் லாரி, சுப்புராயன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது. அதில் டிராக்டர் சேதமடைந்ததால், கதிர்வேலிடம், சுப்புராயன் நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விபத்து பிரச்னை அவர்களுக்குள் முன்விரோதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, சுப்புராயன், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர், கதிர்வேல் ஊருக்கு அருகில் உள்ள திருக்கனூர் பாரில் மது அருந்தியுள்ளனர். அந்த இடத்தில் கதிர்வேலும் மது அருந்தியுள்ளார்.
அப்போது, அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கதிர்வேல் மீது சுப்புராயன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் முன்விரோதம் அதிகரித்துள்ளது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு திருவக்கரை கிராமத்தில் நடந்த கூத்து பார்ப்பதற்கு கதிர்வேல் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அங்கு சுப்புராயன் தலைமையிலான கும்பல் மதுபோதையில் இருந்துள்ளனர். எங்கள் ஊருக்கே விலை உயர்ந்த பைக்கில் வந்து கெத்து காட்டுகிறாயா என ஆத்திரமடைந்தனர். அந்த ஆத்திரத்தில், கதிர்வேலை பின்தொடர்ந்து சென்று 5 பேரும் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 4 பேர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் கடலூர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டான்.