குன்னம், ஜூலை 29: திருமாந்துறை அருகேயுள்ள அகரம்சீகூர் வெள்ளாற்றுப் படுகையில் தொடர்ந்து மணல் திருடப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருமாந்துறையில் இருந்து வசிஷ்டபுரம் ஊராட்சி பள்ளகலிங்கநல்லூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் லெப்பைக்குடிக்காடு, ஒகளுர், அத்தியூர், அகரம்சீகூர் வழியாக வெள்ளாறு பயணிக்கிறது. இந்த வெள்ளாற்றில் அனுமதியின்றி சமூக விரோதிகள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்றமும் ஆற்று படுகையில் மணல் எடுக்க தடை விதித்தும், நள்ளிரவு நேரங்களில் ஆற்றுப் படுகைகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு ஜரூராக நடந்து வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள சில அதிகாரிகள் துணையுடன் மணல் திருட்டு நடைபெறுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச் சூழலும் சீர்கேடடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல், வெள்ளாற்றின்கிளை நதியான சின்னாறு பகுதிகளிலும் தொடர்ந்து மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து மணல்திருட்டைத் தடுத்து, வெள்ளாற்றுப் படுகையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.