திருமயம், ஜூன் 25: திருமயம் அருகே லாரி பின்னால் பைக் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் அதே இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை, அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(55). இவர், வடவாலம் அருகே உள்ள காயாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையில் திருமயம் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருமயம் அடுத்துள்ள சவேரியார்புரம் செக் போஸ்ட் பகுதியில் டிராபிக் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை டிராபிக் போலீஸ் சார் நிறுத்தியுள்ளனர். இதனால், லாரி மெதுவாக சென்றுள்ளது. இந்நிலையில் லாரியை பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஆரோக்கியராஜ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதியுள்ளார். இதில், ஆரோக்கியராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, திருமயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.