திருமயம், நவ.11: திருமயம் ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால் விரைவில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திருமயம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முயற்சியில் திருமயம் தொகுதி முழுவதும் பல கோடி மதிப்பில் மக்கள் நல வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் கட்டிடங்களாகவோ, சாலைகளாகவோ, விவசாய நலன் காக்கும் கண்மாய், வரத்துவாரிகள் தூர் வாரும் பணியாகவோ, மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டமாகவோ நடைபெற்று வருகிறது.
இதனிடையே திருமயம் ஒன்றிய அலுவலகம் சேதம் அடைந்து வருவதால் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை எழுந்து வந்தது. இதனை கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் ரகுபதி திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் திருமயம் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதனிடையே திமுக ஆட்சி அமைத்ததும் திருமயம் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு மட்டும் சுமார் ரூ. 3.47 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில் தரைத்தளம், மேல் தளம் என இரண்டு தளங்களுடன் கட்டப்படும் ஒன்றிய அலுவலக கட்டிடமானது ஒன்றிய குழு தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கவுன்சிலர்கள் கலந்தாய்வு அறை, கலந்தாய்வு கூட்ட அரங்கம், கணினி அறை, அலுவலர்கள் அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம் மக்கள் நலத் திட்ட பணிகளை அறிவிப்பதோடு நின்று விடாமல் அமைச்சர் ரகுபதி ஒப்பந்ததாரர்களை பணிகள் முடிக்க ஒதுக்கப்பட்ட தேதிக்கு முன்னரே விரைவில் கட்டிடம் கட்டும் பணிகளை முடிக்கும் படி அறிவுறுத்தி வந்தார். இதனால் திருமயம் தொகுதியில் நடைபெறும் மக்கள் நலத்திட்ட பணிகளை பெற்றுள்ள ஒப்பந்ததாரர்கள் விரைவாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் திருமயம் ஒன்றிய அலுவலக புதிய கட்டிட பணிகள் அனைத்தும் முடிவுற்று, சுவர் வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளதாக ஒப்பந்ததாரர் சீமானூர் கணேசன் தெரிவித்தார். எனவே திருமயம் ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் விரைவில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.