சோழிங்கநல்லூர், ஜூன் 10: திருமணம் மண்டபத்தில் மணமகள் அறையை போலி சாவி மூலம் திறந்து நகைகள் திருட முயன்ற 3 வடமாநில வாலிபர்களை உறவினர்கள் மடக்கிப்பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை ஜி.கே.எம்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி(43). இவர் பியூட்டிஷனாக வேலை செய்து வருகிறார். ராயப்பேட்டையில் கடந்த 7ம் தேதி அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றார். அப்போது, இரவு உணவை சாப்பிடுவதற்காக மணமகள் அறையை வினோதினி பூட்டிவிட்டு சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வந்த போது, அறைக்கு முன்பு 2 பேர் நின்று இருந்தனர். ஒருவர் மாற்று சாவி மூலம் மனமகள் அறையை திறந்து உள்ளே நகைகள் மற்றும் பொருட்களை திருட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வினோதினி திருடன், திருடன் என்று அலறி கூச்சலிட்டார். உடனே மண்டபத்தில் இருந்த உறவினர்கள் 3 வாலிபர்களை மடக்கிப் பிடித்து உதைத்து ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறகு பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார்(33), சூரஜ்(28), பத்ரி விஷால்(19) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் திருமணம் மண்டபத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு, மணமகள் அறையின் மாற்று சாவி மூலம் திறந்து நகைகளை திருட முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.