கோவை, ஜூன் 11: கோவையில் திருமணமான 4 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த தீபிகா (21) என்பவருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் திருமணம் முடிந்தவுடன் கோவை வந்து கோவில்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சரவணன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலின் பேரில், விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலைக்கு கணவன், மனைவி சண்டையா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி சாவு: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ஷெர்லின் மெர்வின் (20). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஷெர்லின் மெர்வின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.