கள்ளக்குறிச்சி, ஜூன் 30: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சூர்யா (23). இவருக்கும், கடந்த மே மாதம் 23ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் தியாகதுருகம் ஊர் நல அலுவலர் சாந்தி சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில் 17 வயது சிறுமியை சூர்யா திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை செய்ததில், இந்த சிறுமியை சூர்யா திருமணம் செய்வதற்கு முன்னர் சிறுமியிடம் பலமுறை தொடர்பில் இருந்ததாகவும் தற்போது அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த குழந்தை திருமணத்துக்கு சூர்யாவின் தந்தை பழனிவேல், தாய் அலமேலு மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மகளிர் ஊர் நல அலுவலர் சாந்தி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார், சூர்யா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.