திருமங்கலம், ஆக. 11: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கிய தமிழக அரசுக்கு திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைவர் ரம்யா கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வரவேற்றனர்.
தொடர்ந்து கூட்டத்தில் திருமங்கலம் நகராட்சியில் ரூ.204 லட்சம் மதிப்பீட்டில் 2.902 கி.மீ நீளமுள்ள 25 மண்சாலையை தார் சாலையாக மாற்றுவது, நகராட்சியின் 27 வார்டுகளிலும் உள்ள 2,076 தெரு விளக்குகளை எல்இடி தெரு விளக்குகளாக மாற்றி அமைப்பது, குடிநீர் பிரச்னைக்கு மினி போர்வெல்களை சரிசெய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.