திருமங்கலம், ஆக. 19: திருமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வேடர்புளியங்குளம் அங்கையர்கண்ணிநகரை சேர்ந்தவர் நவீன்குமார்(32). முல்லைநகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கப்பலூர் சிட்கோவில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய நவீன்குமார் வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தங்கதோடு மற்றும் வெள்ளிகொலுசுகள், வெள்ளி வளையல் உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து நவீன்குமார் கொடுத்த புகாரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.