திருமங்கலம், அக். 21: திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்றபோது டூவீலர் மோதியதில், தனியார் நிறுவன காவலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் காமராஜபுரம் வடபகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). மெட்டல் பவுடர் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி (57). தனியார் பள்ளி ஆசிரியை. செல்வராஜ் தன்னுடன் பணிபுரியும் ஜெயமாரி என்பவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் இரவு ஆலம்பட்டி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு, பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரே திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டை கடக்க முயன்ற போது, ஆலம்பட்டியிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற டூவீலர் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.