திருப்போரூர், ஜூன் 7: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் நேற்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கிருத்திகை மற்றும் விசேட தினங்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். மேலும், சுபமுகூர்த்த நாட்களில் கோயிலில் திருமணம் நடத்தவும், மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்தவும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.
தற்போது, வைகாசி மாதம் என்பதால் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட திருமணங்களும், பதிவு செய்யப்படாமல் 100க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றன. இது மட்டுமின்றி, நான்கு மாடவீதிகள் மற்றும் பல்வேறு வீதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு அவற்றில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதனால், அதிகாலை 5 மணியில் இருந்து நான்கு மாடவீதிகளிலும் ஏராளமான கார்கள் அணி வகுத்தன. பலரும் தங்களது வாகனங்களை உரிய நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நான்கு மாடவீதிகளிலும் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக, ஓ.எம்.ஆர் சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மாநகர பேருந்துகள், ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டைக்கு வரும் கண்டெய்னர் லாரிகள், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் பாய்லர் லாரிகள் போன்றவை ஓ.எம்.ஆர் வழியாக செல்கின்றன. அதேபோன்று மாமல்லபுரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் திருப்போரூர் ஓ.எம்.ஆர் சாலை வழியாகவே செல்கின்றன.
இவ்வாறு, இருபுறமும் வாகனங்கள் செல்வதால் எப்போதும் ெநரிசல் மிகுந்த சாலையாக ஓ.எம்.ஆர் சாலை விளங்குகிறது. திருப்போரூர் கோயிலுக்கு வரும் கார்களும், வேன்களும் ஓ.எம்.ஆர் சாலையோரம் நிறுத்தப்படுவதால் தினசரி செல்லும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுவதோடு தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசலும் உருவாகி வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆகவே கோயிலுக்கும், திருமண மண்டபங்களுக்கும் வரும் வாகனங்களை அதற்குரிய உரிய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.