திருப்போரூர், மே 30: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ரூ.53.25 லட்சத்திற்கு பிரசாதக்கடை ஏலம் விடப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரசாதக்கடை நடத்துதல், பக்தர்களின் தலைமுடி காணிக்கை சேகரிப்பு, நெய் தீபம் விற்பனை, வாகன நிறுத்தக் கட்டணம், ஆடு மற்றும் கோழி சேகரித்தல், தேங்காய், உப்பு, மிளகு சேகரித்தல், வெள்ளி உரு விற்பனை, தற்காலிக கடைகள் அமைக்க வாடகை வசூலித்தல் ஆகியவற்றுக்கான ஏலம் நேற்று முன்தினம் கோயில் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த, ஏலத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு அனைத்து இனங்களையும் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் பிரசாதக்கடை ஏலம் 53 லட்சத்து 25 ஆயிரத்திற்கும், வாகன நிறுத்தக் கட்டணம் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும், ஆடு, கோழி சேகரிக்கும் உரிமம் 95 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி உரு விற்பனை செய்யும் உரிமம் 1 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கும், கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களில் அமைக்கப்படும் சாலையோர தற்காலிக கடைகளுக்காக வாடகை வசூலிக்கும் உரிமம் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. பக்தர்களின் காணிக்கை தலை முடி சேகரிக்கும் உரிமம், நெய் தீபம் விற்பனை ஏலம் போன்றவை சரியான தொகைக்கு கேட்கப்படாததால் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.