திருப்போரூர், ஜூலை 16: திருப்போரூர் அரசு மகளிர் ேமல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த தினத்தையொட்டி கல்வி வளர்ச்சி நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தேவி தலைமை தாங்கினார். பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். திருப்போரூர் ஐக்கிய நாடார் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் குழந்தைசாமி, பாலமுருகன், பாக்யராஜ், பேரூராட்சி கவுன்சிலர் மாலதி இளங்கோவன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு, பரிசு வழங்கிக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கலையரங்கத்தின் கூரையில் பாம்பு ஒன்று சுற்றி வந்து கொண்டிருந்ததை பார்த்த மாணவியர் கூச்சல் போட்டு அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, திருப்போரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வந்து கூரை மீது ஏறி பாம்பை லாவகமாக பிடித்து எடுத்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் அரசுப்பள்ளி விழாவில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் ஓட்டம்
52