திருப்பூர், ஆக.4: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, 4-வது திட்ட குடிநீர் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 14-வது வார்டுக்குட்பட்ட பெரியார்காலனி 2, 3, 4 ஆகிய வீதிகளில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கபதற்காக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வீதிகளில் பொதுமக்கள் நடக்க முடியாமலும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி பறப்பதாலும் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அந்த 3 வீதிகளுக்கும் தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு முறையிட்டு வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் அந்த வீதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் உதவி பொறியாளர் பிரபாகரன், 14-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா மற்றும் பொதுமக்களிடம் தார்சாலை திட்ட பணிகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் உடனடியாக பணிகளை தொடங்குமாறு துணை மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.