திருப்பூர், ஜூன் 2: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால், தனியார் பள்ளிகளை விடுத்து, அரசு பள்ளிகளின் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் திருப்பூரில் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின், வருகிற 7ம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போட்டி போட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சில அரசு பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதிகள், 6 முதல் பிளஸ்-1 வரை ஆங்கில வழிக்கல்வி, மாவட்டந்தோறும் மாதிரி பள்ளி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில், மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் இணைந்து, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. பிரசாரத்தின்போது, அரசு பள்ளிகளின் முக்கியத்துவம், அரசு வழங்கி வரும் சலுகைகள், ஆங்கில வழிக்கல்வி என, பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.