திருப்பூர், ஆக. 24: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று பார்க் ரோடு அருகில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம்.
அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி உள்ளிட்ட ஆவணங்களுடன் கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தனர். இதையடுத்து கடன் முகாமுக்கு வந்தவர்களிடம் மேயர் தினேஷ்குமார் குறைபாடுகளை கேட்டு தெரிந்துகொண்டார். மேலும், முகாமில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.