திருப்பூர், மே 28: திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தில் மின்இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
திருப்பூர் மாநகரில் சுமார் 13 கி.மீட்டர் தூரத்திற்கு நொய்யல் ஆறு பாய்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இவை திருப்பூர் மாநகரின் மிக முக்கிய போக்குவரத்து பாதைகளாக இருந்து வருகிறது. இவற்றில் வளர்மதி பாலம் மிகவும் முக்கியமானதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது.
வளர்மதி பாலம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாகும். மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வண்ண ஒளி விளக்குகள், நடைமேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நடைமேடையில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் திருப்பூருக்கு புதியதாக வருகை தருபவர்கள் நின்று நொய்யல் ஆற்றை பார்த்து ரசிப்பது, படம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வண்ண ஒளி விளக்குகளுக்காக பலத்தின் நடைபாதை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி (ஸ்விட்ச் பாக்சின்) உடைக்கப்பட்டு திறந்தவெளியில் உள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வரும் நடைப்பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் இணைப்பு பெட்டி (ஸ்விட்ச் பாக்ஸ்) மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஸ்விட்ச் பாக்ஸ் சீரமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.