திருப்பூர், ஜூலை 3: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அகோரம் தலைமையில் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: ‘குறுமைய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ‘பள்ளி அணிகளை படிவத்தில் நிரப்பி உடனடியாக குறு மையச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜூலை 15 குறுமைய அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
இவ்வாண்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் உடல் வலி, ஊக்க மருந்துகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
சர்வதேச திறனாளர்களைக் கண்டறியும் பேட்டரி டெஸ்ட் போட்டிகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை பெற்றோர்களின் அனுமதியுடன் பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவ்வாண்டு நடைபெறும் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளுக்கு துல்லிய முடிவுகளை அறிவிக்கும் அதிநவீன “போட்டோ பினிஷ்” முறை செயல்படுத்தப்படும்.
இந்த ஆண்டு முதல் மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்கள்,வீராங்கனை அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, அதில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் இருவருக்கு ‘சிறந்த உடற்கல்வி ஆசிரியர் விருது’ வழங்கப்படும். என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.