திருப்பூர், நவ.10: தீபாவளிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் திருப்பூரில் ஜவுளி வியாபாரம் களை கட்ட துவங்கியுள்ளது. நேற்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி நாளைமறுநாள் (12ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால் புத்தாடை, இனிப்புகள் மற்றும் பட்டாசு வியாபாரம் மெல்ல, மெல்ல சூடு பிடிக்க துவங்கியுள்ளது. திருப்பூரில் வழக்கமாக தனியார் நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடாவுக்கு பின்பே வியாபாரம் சூடு பிடிக்கும்.
பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் இதுவரை போனஸ் வழங்கப்படாத நிலையிலும், நேற்று மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, பழைய மார்க்கெட் வீதி, அரிசிக்கடை வீதி, பழைய பஸ் நிலையம், புது பஸ் நிலையம், புஷ்பா தியேட்டர் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் அனைத்து டவுன் பஸ்களும், மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தன.
புது மார்க்கெட் வீதியில் ஏராளமான ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் உள்ளதால். இப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஜவுளிக்கடைகள் மற்றும் தங்க நகை கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசுக்கு உதவியாக ஊர்க்காவல் படை, போலீஸ் நண்பர் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜவுளி எடுக்க வருபவர்களிடம் திருட்டு, வழிப்பறியை தடுக்க சீருடை அணியாத போலீசாரும் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.