திருப்பூர், ஆக. 13: ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற உள்ள இந்த சுதந்திர தின விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
இதன்ஒருபகுதியாக மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை நிகழ்வு நேற்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சுதந்திர தினத்தன்று நடத்தப்பட உள்ள நிகழ்வுகளை நடத்தி காட்டினர். தொடர்ந்து, நாளைய தினம் மீண்டும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டு சுதந்திர தினத்தன்று கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தேசப்பற்றை வெளிக்காட்டும் வகையிலான நடனங்கள், சுந்தரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் வகையிலான நடனங்கள் உள்ளிட்டவை இம்முறை கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.