திருப்பூர், ஜூன் 16: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நேற்றும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மாறாக திருப்பூரில் நேற்று வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரின் பல்வேறு சாலைகளிலும் புழுதிகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் திணறினர்.
காற்றின் வேகம் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாக தங்கள் வாகனத்தை இயக்கினர். சாலைகளில் நிறுத்தி சென்ற வாகனங்கள் சிறிது நேரத்தில் புழுதி படலமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் பலரும் அவதி அடைந்தனர். மேலும் காலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. காற்றின் வேகம் அதிகரிப்பால் வார விடுமுறை இறுதி நாளான நேற்று வெளியே சென்ற பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.