திருப்பூர், ஜூன்6: தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட சில மக்காத தன்மை உடைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் 15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு மெட்ரிக் டன் அளவுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு ரூ.11,500 அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி அலுவலர்கள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினர்.