திருப்பூர், டிச. 4: திருப்பூரில் நேற்று நடந்த அ.தி.மு.க. போராட்டத்திற்கு தொண்டர்களை பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனத்தில் அ.தி.மு.க.வினர் அழைத்து வந்தனர். மேலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர். திருப்பூரில் சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன், கே.என். விஜயகுமார் மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டத்தை காண்பிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில், பல தொண்டர்களை சரக்கு வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையிலும், விதிகளை மீறியும் அ.தி.மு.க.வினர் அழைத்து வந்தனர். இதுபோல் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த இடத்தையும் மீறி சாலையில் அ.தி.மு.க.வினர் பலர் நின்று கொண்டிருந்தனர்.