திருப்பூர், ஜூன் 11: திருப்பூரில் இன்று (புதன்கிழமை) செல்வராஜ் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜின் மகள் எஸ்.செந்தமிழ் மற்றும் யோகேஸ் கண்ணா ஆகியோரது திருமண வரவேற்பு விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளியில் உள்ள சொர்ணம் மஹால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக. தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
விழாவில் தி.மு.க. மாநில, மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசு பிரதிநிதிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளார்கள். இதுபோல் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும். அழைப்பிதழ் கிடைக்கப்பெறாத கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் இதனையே அழைப்பிதழாக ஏற்று, விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர், ஜூன் 11: திருப்பூர், காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (29). இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவில் வழி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் ஜெயபிரகாசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2000 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஜெயபிரகாஷ் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் (21), ஹரிஷ் (21), சங்கர் (26), பவித்ரன் (22), ஆகியோரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் ஜெயபிரகாஷிடம் பணம் மற்றும் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து செல்போனை மீட்டனர்.