திருப்பூர், ஆக. 12: திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, திருப்பூர் மாநகரின் சந்திராபுரம், செவந்தாம்பாளையம், தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, புஷ்பா ரவுண்டானா, குமரன் சாலை, காங்கேயம் பாளையம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இருப்பினும் 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகிறது.