திருப்புவனம், ஆக. 4: திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தாலூகா ஆபீஸ், காவல நிலையம், காவல் நிலைய குடியிருப்புகள், பெண்கள் மேல் நிலைப்பள்ளி, தொடக்க நடுநிலைப் பள்ளிகள், அரசு தாலுகா மருத்துவமனை 10க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. திருப்புவனத்தை சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் பல்வேறு தேவைகளுக்கு திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
சேதுபதி நகர், பாக்ய நகர் பகுதிகளில் நகர் விரிவாக்கம் அடைந்து வருகிறது. இந்நிலையில் 18 வார்டுகளிலும் நாளோன்றுக்கு 7.5 டன் குப்பை சேர்கிறது. இந்த குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்குவதற்கு பேரூராட்சி சார்பில் ரூ 24.32 லட்சத்தில் 16 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை நேற்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, உதவி பொறியாளர் சந்திரமோகன், துணைத்தலைவர் ரகிமத்துல்லாகான் உட்பட பணியாளர்கள் பங்கேற்றனர்.