திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகப்பெருந் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத்திற்காக, தேர்கள் வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்தாண்டு வைகாசி பெருவிழாவிற்காக நேற்று முன் தினம் கோயிலில் கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது.
இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். இதில் ஜூன் 4ம் தேதி காலை 9.30 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஜூன் 8ம் தேதி அதிகாலை ஐம்பெரும் கடவுளர், திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதனை முன்னிட்டு தேரோட்டத்திற்காக கோயிலில் உள்ள மூன்று தேர்களையும் சுத்தம் செய்து வண்ணம் தீட்டும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.