விருதுநகர், ஆக. 4: விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அன்றாடம் நிகழும் பிரச்னைகளுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வு காணும் வகையிலான ஆய்வுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பொறியியல் துறை தலைவர் டாக்டர் அகிலா மற்றும் துறை மாணவர்கள் ஜானோகோதேஷ், சோலைபிரகாஷ், ரபீக் அகமது, ஹரிஹரசுந்தரம் ஆகியோர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தினசரி நிகழும் பிரச்னைகளுக்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வு காண்கின்ற முறையிலான ஆய்வுத்திட்டத்தை தேவஸ்தான நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.
இந்த ஆய்வில், திருமலை திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோக்கன் இல்லா தரிசனம், தங்குமிடம் ஒதுக்கீடு முறைகளில் வெளிப்படைத் தன்மையை கையாள்வது, லட்டு விநியோகத்தில் உள்ள பிரச்னைக்கு தீர்வு, விடுதி பிரச்னைகளை சரி செய்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தமுடியும். ஒருமுறை வரும் பக்தரை அடுத்தடுத்த வருகைகளின் போது அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வு காண முடியும். ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பேராசிரியை, மாணவர்களை கல்லூரி செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.