நன்றி குங்குமம் டாக்டர்திருநெல்வேலி என்ற பெயரே பல்வேறு எண்ணங்களை நம் மனதில் தூண்டக் கூடியது. பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி ஆலயம், வற்றாத ஜீவநதி என்கிற தாமிரபரணி, தனித்துவ சுவை கொண்ட அல்வா என பல்வேறு புகழைக் கொண்டது திருநெல்வேலி. ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் செயல்பட்ட பெருமைகள் கொண்டது. இதனால்தானோ என்னவோ ‘திக்கெல்லாம் புகழ்பெறும் திருநெல்வேலி’ என்று சம்பந்தர் பெருமானே எங்கள் ஊர் பற்றி பாடி வைத்திருக்கிறார் என்று அக மகிழ்கிறார்கள் திருநெல்வேலிக்காரர்கள். பூகோளத்தின் அடிப்படையிலும் தமிழகத்தின் தனித்துவமான பகுதி இது. ஐவகை நிலங்களும் ஒருங்கே அமைந்த ஒரே மாவட்டம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இப்படி பெருமைகள் நிறைந்த திருநெல்வேலியில் 55 ஆண்டுகளாக இயங்கி வருகிறது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. குங்குமம் டாக்டர் ரவுண்ட்ஸ்க்காக சென்றபோது மருத்துவக்கல்லூரியின் டீன் கண்ணன் நம்மை வரவேற்று மருத்துவமனை பற்றிய தகவல்களையும், வசதிகளையும் பகிர்ந்துகொண்டார்.‘‘1957-ம் ஆண்டு திருநெல்வேலி வந்தார் அப்போதைய தமிழக முதல்வரான காமராஜர். நெல்லை மாவட்டம் சுற்று வட்டார பகுதி மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தனி மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி தேவை என்று கருதினார். இதன் காரணமாக 1958-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான அடிக்கல் முதல்வர் காமராஜரால் நாட்டப்பட்டது. பின்பு 1965-ம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. 1982-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 250-ஆக உயர்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று 1,717 படுக்கைகள் எங்கள் மருத்துவமனையில் உள்ளது. அது தவிர புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 330 படுக்கை வசதிகளும் உள்ளன. 1982-ம் ஆண்டு முதல் முதுகலை பட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவமனையில் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 5 லட்சம் பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். தினசரி 4 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களையும் சேர்த்து வருடத்திற்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமான பிரசவங்கள் எங்கள் மருத்துவமனையில் நடக்கிறது. டயாலிசிஸ் சிகிச்சையில் நாங்கள் முன்னோடியாக உள்ளோம். சராசரியாக தினமும் 18 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர்.நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி பிரிவு மிக சிறந்த முறையில் இயங்குகிறது. டெங்கு காய்ச்சல் 2012-ம் ஆண்டு உச்சத்தை தொட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த இக்கட்டான சூழலை சவாலாக எதிர்கொண்டு ஒட்டுமொத்த மருத்துவமனை பணியாளர்களும், டாக்டர்களுடன் இணைந்து பணி செய்து கட்டுக்குள் வந்தோம். இதனைத் தொடர்ந்து நோய் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மருத்துவக்கல்லூரியிலும் அருகில் உள்ள ஆராய்ச்சி மையத்திலும் மத்திய அரசு உதவியுடன் ஆராய்ச்சி பணிகள் நடக்கின்றன. தமிழகத்திலேயே ஆராய்ச்சியும் மேற்கொள்ளும் ஒரே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதுதான். இங்கு ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் உள்ளன. மருத்துவ மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இது பலவிதங்களில் பயனளிக்கிறது. பிறவியிலேயே காதுகேளாத தன்மை, பிறவியிலேயே சத்து குறைபாடு போன்ற நோய்களுக்கு மரபணு சோதனை நடத்தப்படுகிறது.’’டாக்டர் தெய்வநாயகம் (நுண்கதிர் சிகிச்சை துறைத்தலைவர்) ‘‘நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக மாறிட அரசு அனுமதித்துள்ளது. இதற்கான புதிய கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. எங்கள் துறையில் ரேடியோ சிகிச்சைத்துறையில் சிகிச்சை வசதிகள் மேம்பட்டுள்ளதால் புற்றுநோய்க்கு தினமும் 250 முதல் 300 பேர் வரை புறநோயாளிகளாக வருகின்றனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு காரணமாக ஆரம்ப நிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்புகின்றனர்.’’டாக்டர் ரவிச்சந்திரன் எட்வின் (இதயவியல் துறைத்தலைவர்) ‘‘எங்கள் துறைக்கு வழங்கப்பட்டுள்ள கேத் லேபில் சிறப்பான சேவை வழங்கி வருகிறோம். இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 844 பேர் ஆஞ்சியோகிராம் சிகிச்சையும், 478 பேர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் பெற்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளோம்.’’டாக்டர் அமுதா ராணி (மயக்கவியல்துறை தலைவர்) ‘‘அனைத்து துறை அறுவைசிகிச்சைக்கும் எங்கள் துறை டாக்டர்களின் பங்கு முக்கியமானது. 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மிகவும் அபூர்வமான அறுவை சிகிச்சை, சிறுநீரகம், எலும்பு முறிவு, தலைக்காயம், இதயம் போன்ற பல மணி நேர அறுவை சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைக்கு மயக்கமருந்து கொடுத்து நோயாளியை கண்காணிக்கிறோம். இதன் மூலம் ஏராளமான (critical) ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியுள்ளோம்.’’ ஜமீலா (நர்சிங் சூப்பிரெண்டு) ‘‘ஒவ்வொரு சிறப்பு துறைகளுக்கும் அதற்கென பயிற்சி பெற்ற நர்சுகள் பணியில் உள்ளனர். இதற்காக அவர்கள் கூடுதலாக மதுரைக்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர். முதியோர்களுக்கு தனி வார்டு உள்ளது. இதுபோல் அட்டண்டர் இல்லாத நோயாளிகளை தனி வார்டில் வைத்து கவனிக்கப்படுகிறார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் முதல் முறையாக எங்கள் மருத்துவமனையில் முதலில் தொடங்கப்பட்டது. இங்கு 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சு மற்றும் உளவியல் பயிற்சிகளும், உடல் நல தசை பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்காக ஏராளமான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான ஆட்டிசம் பாதித்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.’’டாக்டர் சுரேஷ்குமார் (இஎன்டி துறைத்தலைவர்)‘‘6 வயதிற்குட்பட்ட பிறவியிலேயே வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு Cochlear implant கருவி காதினுள் பொருத்தப்படுகிறது. இதனால் கேட்கும் சக்தி வந்து பேசும் திறனும் கிடைக்கிறது. 3 குழந்தைகளுக்கு இக்கருவி பொருத்தப்பட்டு பலனடைந்து வருகின்றனர். இந்த கருவியை தனியார் மருத்துவமனைகளில் பொருத்த ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகும்.குழந்தைகள் நலப்பிரிவில் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு சிறப்பு கவன சிகிச்சை மூலம் நலமடைகின்றனர். பச்சிளம் குழந்தைக்கு தனியாக சிகிச்சை அளிக்கும்போது அதற்கு தேவையான தாய்ப்பால் வழங்க தனியாக தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. சிகிச்சை முடிந்த வீடு சென்ற பின்னரும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் வரவழைத்து குழந்தையின் உடல் எடை மற்றும் உடல் நலம் குறித்து பரிசோதிக்கப்படுகிறது.’’டாக்டர் மணிகண்டன் (எலும்பியல் சிகிச்சை துறைத்தலைவர்)‘‘விபத்தில் சிக்கி கை, கால் முறிவு ஏற்பட்டு வருவர்களுக்கு தாமதமின்றி உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. எலும்பு முறிவுடன் வருபவர்களுக்கு உடலில் நீரிழிவு, இதய நோய் போன்ற வேறு எந்த பெரிய பிரச்சினை இல்லாதவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கிலேயே பிளேட் வைத்து சிகிச்சை அளிக்கிறோம். இதனால் அவர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த முறை மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் நலமடைகின்றனர்.’’சுகன்யா (நோயாளி – ஆலங்குளம்);‘‘பிறந்து 50 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இங்கு அழைத்துவந்தோம். இங்குள்ள பிறந்த பச்சிளங் குழந்தைகள் பிரிவு டாக்டர்கள் குழந்தையை நீண்ட போராட்டத்துக்குபின் குணமாக்கிவிட்டனர்.’’பாலசந்திரா (நோயாளி – மேலமுன்னீர்பள்ளம்) ‘‘நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை நன்றாக கவனிக்கின்றனர். குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களை குழுவாக கவனித்து காப்பாற்றுகின்றனர். மூச்சுதிணறல் இருந்த எனது குழந்தைக்கு 53 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் சரியானது. பிறந்த குழந்தைகள் கவனிப்பு பிரிவில் நோயில் இருந்து குணமடைவதற்கு ஏற்ப 3 விதமான அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மீண்டும் பரிசோதனைக்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அழைக்கின்றனர்.’’அரசின் கவனத்துக்கு…நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், நர்சுகள், மாணவர்கள், வெளி, உள் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் என நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் கூடுகின்றனர். சில துறைகளில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்க போதுமான இட வசதி இல்லை. ஓரிரு காத்திருப்பு அறைகள் உள்ளது. எனவே ஒவ்வொரு முக்கியத்துறைகளின் அருகிலேயும் உறவினர்கள் காத்திருப்பு கூடங்கள் குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் அமைத்துக் கொடுக்க வேண்டும்.– சுந்தர் பார்த்தசாரதி, வ.ஜெகதீஷ்படங்கள்: ராஜசேகர்
திருநெல்வேலி அரசு மருத்துவமனை
previous post