காரைக்கால், செப்.30: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகேயுள்ள அகலங்கண்ணு கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா (29) மகன் விக்னேஷ் (8). கடந்த 21-ம் தேதி திருநள்ளாறு சந்தை வெளித் தோப்பில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த மனைவி, மகனை அழைத்துச் செல்ல நண்பரின் பைக்கை எடுத்துக் கொண்டு ஜீவானந்தம் வந்திருக்கிறார். செல்லூர் பகுதியிலிருந்து திருநள்ளாறு நோக்கி வந்தபோது கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே சாலையின் குறுக்கே ஓடிய மாடு மீது பைக் மோதியது.
இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜீவானந்தத்திற்கு தலை, நெற்றி, தோள்பட்டை, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அவரது நண்பர் தாமோதரன்(31) ஜீவானந்தத்தை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜீவானந்தம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து ஜீவானந்தத்தின் உறவினர் பக்கிரிசாமி(55) காரைக்கால் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.