தேனி, ஜூன் 20: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 24ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இம்முகாமில், திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வசதியாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, திருநங்கைகளுக்கு நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சர் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய சேவைகளை இம்முகாம் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இம்முகாமில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.