தேனி, ஆக. 5: தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் சியாமளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 20 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் வீட்டு மனை கேட்டு 12 பேரும், காவல்துறையில் வேலை கேட்டு ஒருவரும், கல்விக் கடன்கேட்டு ஒருவரும், அடையாள அட்டை கேட்டு ஒருவரும், சுயதொழில் தொடங்கிட கடன்உதவி கேட்டு 2 பேரும், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்துதரக் கேட்டு ஒருவரும் மனு அளித்தனர். இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்காகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பல் திருநங்ககை்கு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாவலர் பணி வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.