திருத்துறைப்பூண்டி, ஜன. 26: வாக்காளர் தினத்தன்று நூறு சதவீத வாக்குபதிவை எட்டுவதே நோக்கம் என நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சி, பாலம் சேவை நிறுவனம் இணைந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தியது. இதில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன், பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2011-ம் ஆண்டு முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். எனவே இவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அவர்கள் அளிக்கும் வாக்கின் சக்தி மகத்துவம் குறித்து அறிய செய்ய வேண்டும். தேர்தலன்று தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தி விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
எவருடைய வற்புறுத்தலையும் ஏற்காமல் எனது வாக்கு எனது உரிமை என்ற நோக்கில் செயல்பட வேண்டும், வாக்குபதிவு அன்று முதல் ஆளாக வாக்கு அளிக்க முன்வரவேண்டும், மற்றவர்களை வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
மாற்றுதிறனாளிகள், நோய்வாய்பட்டவர்களுக்கு வாக்களிக்க உதவிட வேண்டும், வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களை வாக்களிக்க அழைக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரயிருப்பதால் இச்செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தேர்தலில் நூறு சதவீத வாக்குபதிவை கொண்டுவர வேண்டும் என்றார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது, வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது, நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர் சிற்றரசு, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.