திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். முன்னதாக சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரகு வரவேற்றார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமையாசிரியர் பேசும்போது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம். மேலும் இந்த ஆண்டிற்கான முக்கிய குறிக்கோளாக நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்ற தலைப்பின் கீழ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
நான் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன் காடுகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையை பாதுகாப்பேன் நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுப்பேன் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டேன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். குப்பைகளை பொது இடங்களில் போடமாட்டேன் மின்சாரத்தை சேமிப்பேன். எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைப்பேன் என்று மாணவர் சந்தோஷ் குமார் உறுதி மொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதி ஏற்றனர். நிகழ்ச்சியில் தேசிய பசுமைப் படை மாணவர்களால் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி வளாகத்தில் இருந்து தேசிய பசுமைப்படை மற்றும் சாரண மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி கட்டிமேடு முக்கிய வீதி வழியாக சென்று கட்டி மேடு ஊராட்சி மன்றத்தில் நிறைவடைந்தது.