திருப்புத்தூர், ஜூன் 3: திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதினம் பிரான்மலை வகை ஐந்து கோயில்களுள் ஒன்றான திருப்புத்தூர் சிவகாம சுந்தரி உடனுறை திருத்தளிநாதர் சுவாமி, யோக பைரவர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருந்திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு இந்த விழா கடந்த மே 31ம் தேதி கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 5ம் திருநாளான நாளை ஜூன் 4ல் காலை தென்மாபட்டியில் அமைந்துள்ள வேலாயுத சுவாமி கோயில் மடத்தில் இருந்து பக்தர்கள் திருத்தளிநாதர் கோயிலுக்கு திருமண சீர்வரிசை எடுத்து வருவார்கள்.
தொடர்ந்து காலை 8 மணியளவில் சிவகாம சுந்தரி அம்பாள் தவத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் காலை 9 மணி முதல் 10.15 மணிக்குள் கோயில் திருநாள் மண்டபத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இரவு சுவாமிகள் பூப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான ஜூன் 8ல் காலை 5.10 மணிக்கு மேல் 6 மணிக்குள் ஐம்பெரும் கடவுளர் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறும்.