திருத்தணி, ஜூன் 11: திருத்தணி ம.பொ.சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. திருத்தணி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த, புதிய கட்டிடத்தில் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால், ம.பொ.சி சாலை காமராஜர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு பாதிப்பின்றி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த, காமராஜர் மார்க்கெட் கடைகளுக்கு எதிரில் நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர வியாபாரிகள் கடைகள் வைத்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காமராஜர் மார்க்கெட்டில் நகராட்சிக்கு வாடகை செலுத்தி வியாபாரம் செய்பவர்கள் சாலை ஆக்கிரமிப்பு கடைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் மு.பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர். இந்தநிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், சாலை ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.