திருத்தணி, ஆக 29: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி யானைக்கு ₹49.50 லட்சம் மதிப்பீட்டில் மணி மண்டபம் அமைக்க, சிற்ப கலைநுட்பத்துடன் கல்தூண் செதுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகனுக்கு திருமண சீதனமாக இந்திரன் யானை வழங்கியதாக புராணம் கூறுகிறது. முருகப்பெருமானின் மற்ற கோயில்களில் முருகன் வாகனம் மயில் காட்சி தந்தாலும் திருத்தணி மலைக் கோயில் கொடிமரத்திற்கு அருகில் கிழக்கு திசை நோக்கி யானை காட்சி அளிப்பது இக்கோயிலின் சிறப்பு.
முருகன் கோயிலில் சேவை புரிந்த வள்ளி யானை கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு முருகன் கோயிலின் உப கோயிலான நந்தி ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது. யானைக்கு நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2022-23ம் ஆண்டு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திருத்தணி முருகன் கோயில் யானைக்கு கல்தூண் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி ₹49.50 லட்சம் மதிப்பீட்டில் ஆறுமுக சாமி கோயில் வளாகத்தில் யானை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்தூண் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. சிற்ப கலைநுட்பத்துடன் தூண்கள் அமைக்கும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வள்ளி யானை நினைவாக மாமல்லபுரத்திலிருந்து யானை சிற்பம் கொண்டு வரப்பட்டு நினைவு மண்டபத்தில் மையப் பகுதியில் வைக்கப்பட உள்ளதாகவும், 2 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் என்று திருக்கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த யானைக்கு நினைவு கல்தூண் மண்டபம் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.