திருத்தணி, மே 27: திருத்தணி முருகன் கோயில் உள்ள மலைப்பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசலால், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். திருத்தணி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்குகிறது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் மலை பாதை வழியில் மலைக்கோயில் வந்தடைந்தனர். மேலும் படிகள் மார்க்கத்திலும் பக்தர்கள் மலைக்கோயில் வந்தனர்.
இதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் மலைக்கோயில் பாதையில் கார்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டதால், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் மலை கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை முழுவதும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போலீசார் சுமார் ஒரு மணி நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர். இதை தொடர்ந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து திரும்பிச் சென்றனர்.