திருத்தணி, ஜூன் 19: திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 350க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகர்ப்புற பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருந்து பயணம் மேற்கொள்ள வசதியாக அமைக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் மின்விசிறி உடைந்து பயனற்று வீணாகி உள்ளது. இதனால், பயணிகள் அமர வசதியின்றி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதி முழுவதும், பழ வியாபாரிகள், பூ, பொம்மை வியாபாரம் செய்து வருபவர்கள் ஆக்கிரமித்து கடைகளை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பயணிகள் காத்திருக்க முடியாமல் இட நெருக்கடியில் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி சார்பில், அடிக்கடி கடை வியாபாரிகளை எச்சரித்தும் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு பாதிப்பின்றி கடைகள் வைத்து விற்பனையில் ஈடுபடவும், உடைந்துள்ள நாற்காலி, மின்விசிறி வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.